நான் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் ரசித்து உணர்ந்த பாடல்களின் வரிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த ‘மடை திறந்து’. ஒரு கவிஞனின் எழுத்தை ஆராயாமல் அப்படியே ரசித்து விடுவது ரசனை, அதனை ஆராய்ந்து உள்வாங்கிக் கொள்வது ரசனையின் அடுத்தபடி. கவிஞர் இதைத்தான் சொன்னார் என்று எந்தக் கருத்தையும் முன்முடிவுக்குள் கொண்டுவரக்கூடாது. மாறாக நமது பார்வையில் பாடலின் போக்கைக் கொண்டாடலாம். அப்படி எனது கொண்டாட்டமாக இந்தத் தொகுப்பைப் பார்க்கிறேன். வரிகளின் செழுமை, கவிதைத்தன்மை, கதையின் தொடர்பு, கவிஞர்களின் சிந்தனை குறித்த எனது பார்வை ஆகியவற்றை இந்தக் கட்டுரைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
எதற்காக இசையை, பாடல்களைக் கொண்டாட வேண்டும்? இசை என்ன செய்யும்? பாட்டு ஒருவன் மனதை சாந்தப்படுத்தும், குதூகலிக்கச் செய்யும், களித்துக் கிடக்கப் பணிக்கும், தாலாட்டும், கிளர்ச்சியூட்டும். ஆனால் தனித்துக் கிடப்பவன் கொண்டாடும் இசை அவனை வாழ வைக்கும். சகலமாய் கேட்கும் ஓசைகளில் சில சப்தங்கள் மட்டுமே இசையாய் பிரிகிறது. அப்படிப் பிரியும் காற்றின் இசையைப் பிடித்துப் பெயர் கேட்டால் அது ‘துணை’ என்று சொல்லும். இசை மட்டுமே வாழ்க்கையாகி விடாதுதான். ஆனால் வாழ்வின் பல பகுதிகளை இசையால் அழகாக்க முடியும். ‘இன்னிசை மட்டும் இல்லையென்றால்.. நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்’ என்பது வெறும் பாடல் வரியோ நாடகத்தனமான வசனமோ அல்லது கவர்ச்சி செய்யுளோ அல்ல. நாளெல்லாம் உணர்ந்த ரசிகர்களின் கூற்று..