Rs. 3900 Original price was: Rs. 3900.Rs. 3310Current price is: Rs. 3310.
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?’ இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சோஃபியும் விடைதேடத் தொடங்குகிறாள். அதன் வழியாக மனிதகுலத்தின் வரலாற்றை, தத்துவப் போக்குகளைப் புரிந்துகொள்கிறாள்.
இந்தப் பிரபஞ்சம், இந்த பூமி, இந்த வாழ்க்கை இவை எல்லாம் எப்படி வந்தன என்ற கேள்வி ஒலிம்பிக் போட்டியில் யார் அதிகம் தங்கப் பதக்கங்களை வென்றார்கள் என்பதைவிட முக்கியமானது என்பதை இளம் தலைமுறைக்கு வலியுறுத்த எழுதப்பட்ட நூல் ‘சோஃபியின் உலகம்’. தத்துவ நூலுக்குரிய இறுக்கமில்லாமல் ஒரு நாவலின் சுவாரசியத்தோடு எழுதப்பட்ட இந்நூலில் மனிதனின் ஆதிகால நம்பிக்கைகள் முதல் சாக்ரடீஸ், பிளாட்டோ வழியாக சார்த்தர் உட்பட்ட சான்றோர்களின் சிந்தனைகள்வரை அறிமுகமாகின்றன.
இதுவரை ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று கோடிப் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து உலகில் அதிக எண்ணிக்கையில் வாசகர்களைப் பெறும் நூலாகக் கருதப்படும் ‘சோஃபியின் உலகத்தை’ தெளிவான மொழியாக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது ‘காலச்சுவடு பதிப்பகம்’.