Rs. 6300 Original price was: Rs. 6300.Rs. 5040Current price is: Rs. 5040.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மராத்திய இலக்கியத்தில் சிறப்பான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காவியப் படைப்பு இது.“என்ன, மீண்டும் மகாபாரதக் கதையா?” என்று நீங்கள் மலைக்க வேண்டாம். நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது: பாண்டவர்கள் நல்லவர்கள்; துரியோதனன் வில்லன்; கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் கெட்டவர்கள் பக்கம் இருந்ததால் அழிந்து போனான்; கிருஷ்ணர் நல்லவர்கள் பக்கம் இருந்தார்; திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருந்தாள்; தர்மன் தன் மனைவி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான்; இறுதியில் பங்காளிச் சண்டையில் கிட்டத்தட்ட அனைவருமே கொல்லப்பட்டனர். என்ன, சரிதானே?
ஆனால் இதே மகாபாரதக் கதையை மராத்திய இலக்கிய ஜாம்பவானான சிவாஜி சாவந்த் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுகியுள்ளார். இதில் அவர் கர்ணனின் மனத்தை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதன் விளைவாக, இப்புதினம், ‘நான் யார்?’ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது.
மேலும், காலங்காலமாக மனித சமூகத்தில் நிலவி வந்துள்ள ஒரு முக்கியமான யதார்த்தத்தைக் கர்ணன் மூலம் சாவந்த் கடுமையாகச் சாடுகிறார். ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பான நடத்தையைக் கொண்டிருந்தாலும், அவன் எவ்வளவு மதிப்பானவனாக விளங்கினாலும், சமுதாயத்திற்கு அவன் ஆற்றியுள்ள பங்களிப்பு எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், ஒரு சமூகம் என்ற முறையில் நாம் அவனுடைய சமூகப் பின்புலத்திற்குத்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற உண்மைதான் அது. இந்த உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதற்குக் கர்ணனின் சமூகப் பின்புலமும், அப்பின்புலத்தின் காரணமாக சமுதாயத்தால் அவன் பந்தாடப்பட்டதும் இந்நூலாசிரியருக்கு வெகுவாகக் கை கொடுத்துள்ளன.
எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இந்நூல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.இம்மொழிபெயர்ப்பின் மூலம் இப்போது தமிழில் சீற வந்துள்ளான் கர்ணன்!