Rs. 780 Original price was: Rs. 780.Rs. 700Current price is: Rs. 700.
Out of stock
Out of stock
காதலுக்கு காலம் இருக்க முடியுமா? மனதின் மதகுகளைத் திறந்து விடக்கூடிய கேள்வி! அழிந்து போன மம்மோத் யானை போல் எல்லாரின் மனங்களுக்குள்ளும் ஒரு காதல் பதனிடப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது அழிந்தது, ஏன் உறைந்தது, ஏன் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை?
மனிதராக, கட்டடமாக, பொருளாக, உயிராக, புலன்கள் கொண்டு நாம் நுகர்ந்தறியும் இவ்வுலகின் எந்தக் கண்ணி, காதலாக எந்த நொடியில் பரிணமிக்கிறது என்கிற அறிவியல் ஏதுமில்லை.
ஒரு முத்தம், ஒரு புணர்தல், ஒரு விம்மல், சில நியூரான் பூக்கள், அருகாமை வெப்பம், சில சுரப்பிகள், சில இமைச்செருகல்கள், ஸ்பரிசப்பற்று, வன்மப்ப பிசுபிசுப்பு, தெரிந்த வார்த்தைகளின் புரியாத அர்த்தங்கள் என கலையும் மேகத்தில் காட்சியைக் காண்பது போல் ஆங்காங்கே தொட்டுக் காதலை வரைகிறோம். திடுமென அக்காட்சி கலைந்து விரும்பாத ஒரு காட்சிக்கு மாறி திகைக்க வைக்கிறது. ஒருவேளை காதலை பௌதிகமாக பொருண்மையாக அணுகினால் என்னவாகும்? உன்னதம் என்று சிறகை எடுத்துவிட்டு யதார்த்தம் என்கிற சமூகச் சூழலுக்குள் பொருத்தினால் காதல் என்ன புரிதலை தரும்?
அதிகாலை எழுந்து, காலைக்கடன் முடித்து, இருப்பதை ருசி பார்க்காமல் வாய்க்குள் தள்ளி, அவசர அவசரமாகக் கிளம்பி, நான்கு தெருக்கள் நடந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, கூட்டம் பிதுக்கித் தள்ளும் பேருந்துக்குள், மனித நாற்றம் துளைக்கப் பயணித்து, பணியிடம் சென்று வெறுப்பான வேலையைப் பார்க்கும் அலுப்பான வாழ்க்கை கொண்ட விஷயமாக காதலை அணுகுகையில் அது நமக்கு அணுக்கமாகுமா?
காதலை அரசியலுடன் பாலினத்துடன் ஆதிக்கம் உணர்வுடன், நுகர்வுத் தன்மையுடன், மாறிவரும் இன்றைய காலச்சூழலுடன் புரிந்து கொள்ளும் முயற்சியில் தான் இத் தொகுப்பு உருவாகியிருக்கிறது. எனவே தான் இது காதல் மட்டும் அல்ல, காதல் etc!. இவை கட்டுரைகள் அல்ல. காதல் தொடர்பாக நான் சந்தித்த, கேட்ட, பார்த்த உணர்ந்த விஷயங்களை பற்றி நான் எழுதிய Facebook பதிவுகள்.
– ராஜசங்கீதன்