Rs. 1575 Original price was: Rs. 1575.Rs. 1340Current price is: Rs. 1340.
3 in stock
3 in stock
ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று “வெண்ணிறக் கோட்டை”. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி “கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்” என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான “வெண்ணிறக் கோட்டை”யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக்.
“வெண்ணிறக் கோட்டை”யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை.
ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு.
ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.